சிவஸ்தலம் பெயர் - திருக்கடையூர்
இறைவன் பெயர் - அமிர்தகடேஸ்வரர்
இறைவி பெயர் - அபிராமி
தல மரம் - வில்வம், ஜாதி (பிஞ்சிலம்)
தீர்த்தம் - அமிர்த தீர்த்தம், சிவகங்கை.
வழிபட்டோர்- திருமால், பிரமன், மார்க்கண்டேயர், எமன், ஏழு கன்னிகள், அகஸ்தியர்,புலஸ்தியர், வாசுகி, துர்க்கை, ஆகியோர்.
செல்லும் வழி- மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலை மார்க்கத்தில் மயிலாடுதுறையில் இருந்து 23 கி.மி. தூரத்தில் திருக்கடையூர் இருக்கிறது. சீர்காழியில் இருந்து சுமார் 30 கி.மி. தொலைவில் சீர்காழி - நாகப்பட்டினம் சாலை வழியில் இத்தலம் உள்ளது. இது ஒரு அஷ்ட வீரட்டான ஸ்தலம்.
ஆலயம் பற்றி -
எமபயம் நீக்கும் தலங்கள் திருக்கடையூர், திருவீழிமிழலை, திருவையாறு, திருவெண்காடு, திருவைகாவூர் ஆகியவை ஆகும். இவற்றுள் திருக்கடையூர் மிகவும் பிரசித்தி பெற்ற தலம்.
புராண வரலாறு- பிரம்மா ஞானோபதேசம் பெற விருப்பம் கொண்டு சிவபெருமானை வழிபட்டார். சிவபெருமான் வில்வ விதை ஒன்றைக் கொடுத்து, அவ்விதை நடப்பட்ட ஒரு முகூர்த்தத்திற்குள் எந்த இடத்தில் முளை விடுகிறதோ அங்கு தன்னை வழிபடும்படி தெரிவிக்கிறார்.பிரம்மாவும் அந்த விதையை பல இடங்களில் நட்டுப் பார்த்து திருக்கடவூரில் முளை விடக் கண்டார். இதனால் இத்தலம் வில்வவனம் என்று பெயர் பெற்றது. பாற்கடலைக் கடைந்து எடுத்த அமுதத்தை தேவர்கள் அசுரர்களுக்கு கொடுக்க விரும்பாமல் அதை குடத்தில் (கடம்) எடுத்துக் கொண்டு செல்லும் போது வழியில் நீராடுவதற்காக இத்தலத்தில் இறக்கி வைத்துவிட்டு நீராடச் சென்றனர். திரும்பி வந்து குடத்தை எடுக்க முயற்சி செய்த போது குடத்தை எடுக்க முடியவில்லை. குடம் பூமியில் வேர் ஊன்றி விட்ட இடம் இத்தலமான திருக்கடவூர் என்று பெயர் பெற்றது. அந்த்க் குடம் லிங்க வடிவில் நிலைத்து நின்றபடியால் இந்த லிங்கேஸ்வரர் அமிர்தகடேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
No comments:
Post a Comment