Monday, 29 September 2008

திருவிடைமருதூர்



சிவஸ்தலம் பெயர் - திருவிடைமருதூர்


இறைவன் பெயர் - மஹாலிங்கேஸ்வரர்


இறைவி பெயர் - பிருஹத் சுந்தர குசாம்பிகை, நன்முலைநாயகி


தல மரம் - மருதமரம்


தீர்த்தம் - அயிராவணத்துறை, காவிரி, காருண்ய அமிர்த தீர்த்தம் வழிபட்டோர்- உமாதேவியார், ருத்திரர், மூத்த பிள்ளையார், முருகர், பிரமன், திருமால்.


செல்லும் வழி- கும்பகோணத்தில் இருந்து 9 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.


ஆலயம் பற்றி -திருவிடைமருதூரில் உள்ள சிவாலயம் சுமார் 1200 வருடங்களுக்கு மேல் பழமையான ஒரு ஆலயமாகும். நெடிதுயர்ந்த கோபுரங்களும் நீண்ட பிரகாரங்களும் உடைய இக்கோவில் மத்யார்ஜுனம் என்று வழங்குகிறது. இக்கோவில் 3 பிரகாரங்களைக் கொண்டதாகும். இம்மூன்று பிரகாரங்களிலும் வலம் வருதல் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.


அஸ்வமேதப் பிரகாரம்:இது வெளிப் பிரகாரமாகும். இந்த்ப் பிரகாரத்தில் கோவிலை வலம் வருதல் அஸ்வமேத யாகம் செய்த பலனைக் கொடுக்கும் என்று புராண வரலாறுகள் கூறுகின்றன.


கொடுமுடிப் பிரகாரம்:இது இரண்டாவதும், மத்தியில் உள்ள பிரகாரமாகும். இப்பிரகாரத்தை வலம் வருதல் சிவபெருமான் குடியிருக்கும் கைலாச பர்வதத்தை வலம் வந்ததற்குச் சமம் என்று கூறப்படுகிறது.


ப்ரணவப் பிரகாரம்:இது மூன்றவதாகவும் உள்ளே இருக்கக் கூடியதுமான பிரகாரமாகும். இப்பிரகாரத்தை வலம் வருவதால் மோட்சம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.


மூலவர் மஹாலிங்கேஸ்வரர் சந்நிதியின் நான்கு மூலைகளிலும் விஸ்வநாதர், ஆத்மநாதர், ரிஷிபுரீஸ்வரர் மற்றும் சொக்கநாதர் ஆகியோரின் சந்நிதிகள் இருப்பதால் இத்தலம் பஞ்சலிங்கத் தலம் என்றும் அழைக்கப்படுகிறது.திருவிடைமருதூர் தலத்தைச் சுற்றியுள்ள சில ஆலயங்கள் திருவிடைமருதூரின் பரிவார தேவதைத் தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவையாவன.

திருவலஞ்சுழி - விநாயகர்

சுவாமிமலை - முருகர் (முருகனின ஆறுபடை வீடுகளில் ஒன்று)

திருவாரூர் சோமஸ்கந்தர்

சிதம்பரம் - நடராஜர்

ஆலங்குடி - தட்சினாமூர்த்தி

திருவாவடுதுறை - நந்திகேஸ்வரர்

திருசேய்னலூர் - சண்டிகேஸ்வரர்

சீர்காழி - பைரவர்

சூரியனார்கோவில் - நவக்கிரகம்


தலத்தின் சிறப்பு:திருவிடைமருதூர் தலம் வரகுண பாண்டியன் என்ற பாண்டிய நாட்டு அரசனின் வாழ்க்கையுடன் சம்பந்தம் உடையதாகும். ஒருமுறை வரகுண பாண்டியன் அருகிலுள்ள காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். மாலை நேரம் முடிந்து இரவு தொடங்கிவிட்ட நேரத்தில் அரசன் குதிரை மீதேறி திரும்பி வந்து கொண்டு இருக்கும் போது வழியில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு அந்தணன் குதிரையின் காலில் மிதிபட்டு இறந்துவிட்டான். இச்சம்பவம் அவனறியாமல் நடந்திருந்தாலும் ஒரு அந்தணனைக் கொன்றதால் அரசனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது. அந்தணின் ஆவியும் அரசனைப் பற்றிக்கொண்டது. சிறந்த சிவபக்தனான வரகுண பாண்டியன் மதுரை சோமசுந்தரரை வணங்கி இதிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டான். மதுரை சோமசுந்தரக் கடவுளும் அரசனுடைய கனவில் தோன்றி திருவிடைமருதூர் சென்று அங்கு தன்னை வழிபடும்படி கூறினார். எதிரி நாடான சோழ நாட்டிலுள்ள திருவிடைமருதூருக்கு எப்படிச் செல்வது என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த அரசனுக்கு சோழ மன்னன் பாண்டிய நாட்டின் மேல் படையெடுத்து வந்திருக்கும் செய்தி கிடைத்தது. சோழ மன்னனுடன் போருக்குச் சென்ற வரகுண பாண்டியன் சோழ மன்னனை போரில் தோற்கடித்து சோழநாடு வரை துரத்திச் சென்றான். அப்போது திருவிடைமருதூர் சென்று இங்குள்ள இறைவனை வழிபட ஆலயத்தினுள் பிரதான கிழக்கு வாயில் வழியாக நுழைந்தான். வரகுண பாண்டியனைப் பற்றியிருந்த பிரம்மஹத்தியும் அந்தணனின் ஆவியும் அரசனைப் பின்பற்றி கோவிலினுள் செல்ல தைரியமின்றி வெளியிலேயே தங்கிவிட்டன. அரசன் திரும்பி வரும்போது மறுபடியும் அவனை பிடித்துக் கொள்ளலாம் என்று காத்திருந்தன. ஆனால் திருவிடைமருதூர் இறைவனோ வரகுண பாண்டியனை மேற்கு வாயில் வழியாக வெளியேறிச் செல்லும்படி அசரீரியாக ஆணையிட்டு அவனுக்கு அருள் புரிந்தார். அரசனும் பிரம்மஹத்தி நீங்கியவனாக பண்டியநாடு திரும்பினான். இதை நினைவுகூறும் வகையில் இன்றளவும் இவ்வாலயத்திற்கு வரும் பக்தர்கள் பிரதான கிழக்கு வாயில் வழியாக உள்ளே சென்று மேற்கிலுள்ள அம்மன் சந்நிதி கோபுரவாயில் வழியாக வெளியே செல்லும் முறையைக் கடைப்பிடித்து வருகிறார்கள்.

No comments: