'சொப்பன வாழ்வில்மகிழ்ந்து...'
எம்.கே.தியாகராஜ பாகவதர் மனைவி ராஜம்மாள்
'மன்மத லீலையை வென்றார் உண்டோ....' என்ற பாடல் தலைமுறைகளைத் தாண்டி இன்றும் நம் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அந்த கணீர் குரலும், அதன் குழைவும் வசீகரமும் நமக்கு தியாகராஜ பாகவதரின் நினைவுகளை எழுப்பும்.
'ஏழிசை மன்னர்' என்று போற்றப்பட்ட பாகவதர், தனது காலத்தில் தமிழ் திரையுலகில் கொடி கட்டிப் பறந்த தன்னிகரற்ற கலைஞர். தனது தன்னிகரற்ற இசைப் புலமையாலும் நடிப்புத் திறனாலும் அக் காலத்திலேயே ஒரு லட்சம் ரூபாய் ஊதியம் பெற்றார். தங்கத்தட்டில் உண்டு வாழ்ந்த ராஜ வாழ்க்கை அவருடையது.
ஆனால், அந்த முதல் தர கலைஞனின் வாழ்க்கையில் இடையே புயல் வீசியது. பத்திரிகையாளர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கின் காரணமாக 2 ஆண்டு காலம் சிறைவாசம்.
லண்டன் பிரிவியூ கவுன்சில் வரை அந்த வழக்கு போய், பின்னர் பாகவதர் குற்றமற்றவர் என விடுதலை செய்யப்பட்டாலும், சிறை மீண்ட பாகவதர் வாழ்க்கையின் ராஜகோபுரக் கலசம் குடை சாய்ந்து போனதுதான் சோகம்.
அதன் பின்னர், சினிமா வாய்ப்பைத் தவிர்த்த பாகவதர், சொந்தப் படங்களைத் தயாரித்து தோல்வி கண்டு, சொத்துக்களை இழந்தார். ஒரு சகாப்தம் ஓய்ந்து போனது. ஆனால் அவரது வாரிசுகளின் இன்றைய நிலை என்ன ?
புரசைவாக்கம் மில்லர்ஸ் ரோட்டில் தனி பங்களா. மூன்று வெளிநாட்டுக் கார்கள், இட்ட வேலையைச் செய்து முடிக்கப் பணியாட்கள், தினசரி வந்து போகும் சினிமாத்துறை பிரபலங்களின் கூட்டம் என படாடோபமாக வாழ்ந்தவர்கள், −ன்று ஒண்டுக்குடித்தன வாழ்க்கைக்கு வந்துவிட்டனர். பாகவதரின் இரண்டாவது மனைவி ராஜம்மாள், இன்று தனது மூன்று பேரன்களுடன் சூளைமேடு பஜனை கோயில் தெருவில் கவனிப்பாரற்று வாழ்ந்து கொண்டிருக்கிறார். படுக்கை அறையையும் சமையல் அறையையும் ஒற்றைத் தடுப்பு பிரிக்கும் சிறிய வீட்டில் வாடகைக்குக் குடியிருந்து வருகிறார்.
77 வயதிலும் தனது தள்ளாமையைத் தள்ளி வைத்து விட்டுத் தனது பேரன்களுடன்,அவ்வப்போது தலைகாட்டும் அந்த இன்ப நினைவுகளைப் புறந்தள்ளி விட்டு யதார்த்த வாழ்க்கையில் நடைபோடும் அந்த மூதாட்டி பேசுகிறார்.
''எனக்கு சொந்த ஊர் தஞ்சை. இளம் வயதில் தந்தையை இழந்த நான் உறவினர் உதவி இல்லாததால் தாயார் மற்றும் மூன்று தம்பிகளுடன் 1946 -ல் சென்னைக்கு வந்தேன். அப்போது எனக்கு வயது 16. திரைப்படத்தில் நடிக்கலாம் என்று நினைத்து அவரை (பாகவதரை) சந்தித்தேன். அப்போது அவர் 'திருநீலகண்டர்' படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்து என் குடும்ப நிலைமையைச் சொன்ன போது, ' உன் தம்பிகளைப் படிக்க வைக்கத்தானே சினிமாவில் சேர விரும்புகிறாய். அவர்களை நான் படிக்க வைக்கிறேன். நீ சின்னப் பெண்! சினிமா உலகைப் பற்றி உனக்குத் தெரியாது. அங்கு பல சங்கடங்கள் இருக்கு' என்று சொல்லி என் அம்மாவின் சம்மதத்துடன் என்னை மணந்து கொண்டார். அவரோட முதல் சம்சாரம் கமலம் திருச்சியில் −ருந்தாங்க. நான் அவருடன் சென்னையில் இருந்தேன்.
வெளியூர் கச்சேரிக்குப் போகும் போதெல்லாம் என்னையும் கூடவே அழைத்துப் போவார். அவருடன் வாழ்ந்தது என் பாக்கியம் என்றுதான் சொல்ல வேண்டும். என் மீது ரொம்பப் பிரியமாக இருப்பார். அவர் அசைவம் தான் விரும்பிச் சாப்பிடுவார். நான் சுத்த சைவம். வீட்டில் சமையலுக்கு ஆட்கள் இருந்தாங்க. அதனால் தனித் தனியா சமையல் செய்வாங்க. ஒரு கால கட்டத்தில அவர் எனக்காக அசைவம் சாப்பிடுவதை விட்டு விட்டு சைவ சாப்பாடே சாப்பிட ஆரம்பித்து விட்டார்.
அவருக்கு கோபப்படத் தெரியாது. எல்லோரிடம் அன்பாகத்தான் பழகுவார். அந்த நாட்களில் வி.என். ஜானகி, பானுமதி, எம்.ஜி.ஆர், கே.பி. சுந்தராம்பாள் என எல்லா சினிமாப் பிரமுகர்களும் அடிக்கடி வீட்டுக்கு வருவாங்க. யார் வந்தாலும் சாப்பிட்டுதான் போகணும்னு வற்புறுத்திச் சொல்லுவாரு.
எங்களுக்கு அமிர்தலட்சுமி, கானமூர்த்தி என இரண்டு குழந்தைகள். கானமூர்த்தி மீது அவருக்கு ரொம்பப் பிரியம். அவன்தான் தன்னைப் போல் பெரிய ஆளா, பாடகனா, நடிகனா வருவான்னு சொல்வார்.
அவனுக்கு ஒரு வயது இருக்கும் போது விஷக்காய்ச்சல் வந்தது. மிகவும் சோர்ந்து போனேன். பூனாவில் சினிமா படம் எடுக்கப் போன போது சிறப்பு டாக்டரை வைத்து வைத்தியம் பார்த்தும் பயனில்லாமப் போச்சு. அவன் மூளை வளர்ச்சியில்லாம இருந்து அண்மையில்தான் இறந்து போனான்.
அவர் பிரபலமாக இருந்த போது ராத்திரி பகலா நடித்துக் கொடுத்துக் கொண்டிருந்தார். முருகன் டாக்கீஸ், ராயல் டாக்கீஸ் என்று பல ஸ்டுடியோக்கள் அப்போது இருந்தது. படம் எடுக்கற காலத்தில் சாப்பாட்டுக்கு வீட்டுக்குதான் வருவார். ரெக்கார்டிங் வசதி எல்லாம் அப்பவே இருந்தது. இருந்தாலும் அவர் சொந்தக் குரல்காரர் ஆச்சே, அதனால் பாடிக்கிட்டேதான் நடிப்பாரு.
நானும் அவர் கூட அடிக்கடி ஷ¥ட்டிங் பார்க்கப் போவேன். இவர் சரியாக நடிச்சாலும், துணை நடிகர் யாராவது சரியா செய்யலைன்னு மறுபடியும் மறுபடியும் 'டேக்' எடுப்பாங்க. அவங்க கஷ்டப்படறதைப் பார்க்க சகிக்காமல் பாதியில் எழுந்து வந்து விடுவேன்.
அப்பல்லாம் ரொம்பக் கஷ்டம். ஒரு படத்தை ரொம்ப நாள் எடுப்பாங்க. கச்சேரிக்காக வெளியூர் போவாங்க. இடையில் 'பவளக்கொடி' நாடகத்தில் நடித்தார்கள். அதற்காகவும் வெளியூர் போனாங்க. சினிமா நடிப்பெல்லாம் பெரும்பாலும் சென்னையில் தான். யாருக்கிட்டேயும் ஒரு மனஸ்தாபமுமில்லாமப் பழகுவாங்க.
'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு' வரையிலும் எல்லாம் நல்லபடியா செல்வாக்கோடுதான் இருந்தோம். அதன் பிறகுதான் எல்லாக் கஷ்டமும் ஆரம்பமாச்சு. ரெண்டு வருஷம் சிறையில் இருந்து விட்டுத் திரும்பிய பிறகு, அவர் யார் படத்திலும் நடிக்கப் போகவில்லை. 'கேஸ்' விஷயத்தில் சினிமாக்காரங்க யாரும் உதவலை என்று கொஞ்சம் வருத்தம் அவருக்கு.
பலரும் வந்து தங்கள் படத்தில் நடிக்கக் கூப்பிட்ட போது அவர் போகவில்லை. சொந்தப் படம் எடுக்கப் போறேன்னு சொல்லி 'ராஜமுக்தி' படம் எடுத்தார். அதை, பூனாவுக்கெல்லாம் போய் எடுத்தோம். வி.என். ஜானகிதான் கதாநாயகி. எம்.ஜி.ஆர் - பானுமதி எல்லாம் கூட அதில் நடித்தார்கள். ஒரு வருஷம் பூனாவிலேயே தங்கி எடுத்த படம் 'ராஜமுக்தி'. ஆனால் அது சரியாக ஓடலை. அப்புறம் சேலம் எம்.ஏ. வேணு இவரை வைத்து 'சிவகாமி' என்று ஒரு படம் எடுத்தார் அதுவும் சரியாகப் போகவில்லை. இடையில் 'புதுவாழ்வு' என்று ஒரு படம். அதுவும் கூட ஓடலை. 'சிவகாமி' தான் அவரோட கடைசி படம்ன்னு நினைக்கிறேன்.
அவருக்குப் பணத்தை சேர்த்து வைக்கத் தெரியாது. தாராளமாகச் செலவு செய்வார். அவருக்கு நிறைய நண்பர்கள் இருந்தார்கள். மாமுண்டி ஆச்சாரி, கோவிந்தசாமி என்பவர்கள் அவருடனேயே இருப்பாங்க. கவிஞர் சுரதா எங்க வீட்டிலதான் அதிகம் இருப்பார்.
'சொக்கலால் பீடி' கம்பெனி முதலாளிக்கு பாகவதர் மீது கொள்ளைப் பிரியம். அவர் இவருக்காக ஒரு கார் கொடுத்திருந்தாரு. குற்றாலம் போனா அவரே வீடு பாத்து வைத்து 10 நாள் தங்கறதுக்கு எல்லா ஏற்பாடும் செய்து தருவார். நாதஸ்வர இசை மேதை ராஜரத்தினம் பிள்ளைக்கு இவர் மேல் ரொம்பப் பற்று. சென்னை வந்தால் எங்க வீட்டுக்கு வருவார்.
எங்க வீட்டில முன்பு 'பாண்டியாக்' வெளிநாட்டுக் கார் இருந்துச்சு. அதில்தான் அடிக்கடி வெளியூர் போவார். எல்லாம் போச்சு. 'சிவகாமி' படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போச்சு. சர்க்கரை வியாதி அதிகமாயிடுச்சு. ஒரு கண்பார்வை சரியாத் தெரியலை. அப்புறம் உப்பு நீரும் வந்திருச்சு. ரத்தக் கொதிப்பு வேறு. ரத்தக் குழாய் வெடித்து விட்டது என்று டாக்டர்கள் சொன்னாங்க. சாகறதுக்கு மூணு நாள் முன்னே இரண்டு கண்ணும் சுத்தமாத் தெரியலை.
அவர் உடம்பு முடியாத போதுகூட யாரிடமும் உதவி கேட்க மாட்டார். மருந்து வாங்கக் காசில்லாம ரொம்பக் கஷ்டப்பட்டோம். கடன் வாங்கக் கூட சம்மதிக்க மாட்டார். உடல் நலமில்லாத போது வந்து பார்த்தவர்களிடம் கூட எதுவும் வாங்க மறுத்துவிட்டார். எஸ்.எஸ்.ஆர்., எம்.ஜி.ஆர் எல்லாம் வந்தாங்க. உங்களுக்குக் 'கனகாபிஷேகம்' செய்கிறோம் என்றார்கள். பிறந்தநாள் கொண்டாடி 'கனகாபிஷேகம்' செய்து உதவலாம் என்று நினைச்சாங்க போலிருக்கு. ஆனா, 'என்னால யாருக்கும் கஷ்டம் வேண்டாம்' ன்னு சொல்லிட்டார்.
சென்னை அரசு பொது மருத்துவமனையில்தான் சேர்த்து வைத்தியம் பார்த்தோம். அங்கே இறந்து விட்டார். அப்புறம் திருச்சிக்கு எடுத்துப் போய் அடக்கம் பண்ணிட்டாங்க. அவர் இறந்த போது வீட்டு வாடகை பாக்கியை அடைக்க முடியாத நிலைமை. அவர் இறந்த பிறகு கொஞ்ச நாள் கழித்து சிவாஜிகணேசன் வந்து பார்த்தார். அவரு 2 ஆயிரமோ என்னமோ கொடுத்தார் . பிறகு ஒரு நோட்டில், 'பாகவதர் மனைவி இவங்க, இவங்களுக்கு உதவி செய்யுங்க' என்று எழுதிக் கொடுத்தார்.
அதை சாவித்திரி, ஜெமினி, நாகேஸ்வரராவ் போன்றவர்களிடம் காட்டிப் பணம் வாங்கினேன். 10 ஆயிரம் ரூபாய் அளவுக்கு சேர்ந்தது. வீட்டு வாடகைக் கடனை அடைத்து விட்டு வேறு இடத்துக்குக் குடி போய் போனேன்.
தஞ்சாவூர்ல படித்துக் கொண்டிருந்த என் தம்பிதான் உடனே எனக்கு உதவ வந்தான். அவன் ஆதரவில் குடும்பம் நடந்தது. ஆரம்பத்தில் சினிமா எடிட்டிங் எல்லாம் செய்தான். அது சரியா வரலை. எனக்காக என் தம்பி கல்யாணமே செய்துக்கலை. எங்களுக்கு உதவியாகவே இருந்துவிட்டான். இப்போ 72 வயதுக்குப் பிறகும் கார் டிரைவராக வேலை செய்து கொண்டுதான் இருக்கான்.
என் மகள் அமிர்தலட்சுமி மூன்று பிள்ளைகளைப் பெத்துக் கொடுத்துவிட்டு இறந்துவிட்டாள். மருமகனும் இறந்து விட்டார். இப்போ இந்த மூன்று பேரன்களோடுதான் இருக்கேன். அவங்களுக்கு சமைத்துப் போட்டுக்கிட்டு வீட்டுல இருக்கேன். வயசு ஆயிடுச்சு. உக்காந்தா எழுந்துக்க முடியலை. ஸ்டூலில் உட்கார்ந்து கொண்டு சாமான்களை எடுத்துத் தரச் சொல்லி சமையல் செய்யறேன்.
இப்போ எப்படியோ எங்க கஷ்டம் வெளியில் தெரிந்து 'சிந்தாமணி' முருகேசன், நடிகர் பார்த்திபன் எல்லாம் உதவிக்கு வந்திருக்காங்க. அரசும் பண உதவி செய்திருக்கு. என் காலம் முடிந்துவிட்டது. இனி என் பேரனுங்க நல்லா இருக்கணும் அவ்வளவுதான்'' என்று ஆதங்கத்தோடு சொல்கிறார் ராஜம்மாள்.
சிகரத்தில் இருந்து பள்ளத்தாக்கில் சறுக்கி விழுந்த சோகம் ராஜம்மாளுடையது. வாழ்க்கையில் மேடு பள்ளங்கள் சகஜம்தான். ஆனாலும், இத்தனை பெரிய சறுக்கல்களை சமாளிப்பது முடியாத காரியம்.
ஒரு நல்ல கலைஞனின் மனைவிக்குக் காலம் கடந்தாவது அரசும், சினிமா உலகமும் உதவ முன் வந்திருப்பது ஆறுதலளிக்கிறது. என்றாலும், எதிர்காலத்திலும் ராஜம்மாள் போன்றவர்கள் உருவாகாமல் பாதுகாப்பதும் திரையுலகினரின் கடமைதான்.