Wednesday, 8 October 2008

நான் கண்ட காந்தி எம்.ஜி.ஆர்

நான் கண்ட காந்தி........

காந்திஜியின் பேரில் எம்.ஜி.ஆர். கொண்டுள்ள பக்திக்கு அளவேயில்லை. இதோ... காந்திஜி பற்றி சொல்கிறார்

எம்.ஜி.ஆர்.காந்திஜியை நீங்கள் முதலில் பார்த்தீர்கள்?

1930ம் ஆண்டு என்று நினைக்கிறேன்.. காரைக்குடியில் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி நாடகத்தில் நான் நடித்துக்கொண்டிருந்த பொழுது காரைக்குடிக்கு வந்திருந்தார் காந்திஜி. அப்போது தான் அவரை பார்த்தேன்.

அவரை பார்த்ததும் முதன்முதலில் உங்களுக்கு எத்தகைய உணர்வு ஏற்பட்டது?

அமைதியும் எளிமையுமே உருவான அவரை பார்த்ததும் ஏதோ தெய்வ தன்மை பொருந்திய ஒருவரை பார்ப்பது போன்ற பக்தி உணர்வு தான் ஏற்பட்டது. அந்த புன் சிரிப்பும், அவரது நடையும், குனிந்த தலையும் என் உள்ளத்தில் இன்றும் சித்திரமாக பதிந்து இருக்கின்றன.

காந்திஜியின் கொள்கைகளில் உங்களுக்கு பிடித்தமானவை எவை?

மது விலக்கு, தீண்டாமை ஒழிப்பு, சமூக சேவை, எளிமை, உண்மை, தேசிய உணர்வு என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

காந்திஜியை பற்றி அண்ணா உங்களிடம் எப்போதாவது கருத்து பரிமாறிக் கொண்டதுண்டா?

கருத்து பரிமாறிக்கொள்ளும் அளவுக்கு நான் பேரறிஞர் அண்ணாவுக்கு சமமானவன் அல்ல. காந்திஜிக்கு முன்பு இருந்த அரசியல்வாதி“கள் எப்போதும் தாங்கள் எடுத்துக் கொண்ட காரியத்தின் வெற்றியை பற்றித்தான் கவலைப்பட்டார்களே தவிர அந்த வெற்றியை அடைவதற்கான வழிகளை பற்றி கவலைப்பட்டது இல்லை. காந்திஜி தான் அரசியல் உலகத்திலும் உண்மையையும், நேர்மையையும் கடைப்பிடித்து வெற்றி காண முடியும் என்று நிரூபித்தவர் என்று அண்ணா பல முறை கூறியிருக்கிறார்.

திரைப்படங்கள் மூலமாக காந்திஜியின் கொள்கைகளை எப்படி பரப்பலாம்?

காந்திஜி கூறிய உயர்ந்த கருத்துக்கள், தத்துவங்கள் அனைத்துமே அன்றாட வாழ்க்கையில் பின்னிப் பிணைந்திருக்கின்றன. மது விலக்கை பற்றி யாராவது வலியுறுத்தினால் அங்கே காந்தி இருக்கிறார். தீண்டாமையை எதிர்த்து எவரேனும் போராடினால் அங்கே காந்தி இருக்கிறார்.உண்மை, எளிமை, அன்பு, நேர்மை ஆகிய பண்புகள் எங்கெங்கு இருக்கின்றனவோ, அங்கெல்லாம் காந்தி இருக்கிறார். மனித வாழ்க்கையிலுள்ள நல்ல தன்மைகள் தான் மகாத்மா. சுருக்கமாக சொன்னால் மனித தன்மை தான் மகாத்மா. ஆகவே அவருடைய கருத்துக்களை பரப்புவதற்கென்று தனியாக படம் எடுக்க வேண்டும் என்பதில்லை.
உயர்ந்த கருத்துக்கள் உள்ள ஒரு படத்தை எடுத்தாலே, அது காந்திய கருத்துக்கள் உள்ள படம் என்று தான் பொருள்.

காந்திஜிக்கு மது, புகை இவை பிடிக்காது. இந்த கொள்கைகயை நடைமுறையில் கடைப்பிடித்து வரும் நீங்கள் அண்மையில் சிகரெட் கம்பெனி நடத்திய விழாவில் கலந்து கொண்டது ஏன்?

ஆரம்பத்தில் அதற்கு ஒப்புக்கொண்ட போது எனக்கு அந்த விவரம் தெரியாது. வறட்சி துயர் துடைப்பு பணிகளுக்காகம், ஸ்டான்லி மருத்துவமனைக்காகவும் நிதி சேர்க்கும் நல்ல காரியம் ஒன்று மட்டும் நினைத்து ஒப்புக்கொண்டேன். பிறகு தான் உண்மை தெரிந்தது. வருத்தப்பட்டேன். அத்துடன் நிற்கவில்லை அதை அன்று மேடையிலேயே கூறி விட்டேன். நிறைய செலவழித்து சிகரெட்டுக்கு விளம்பரம் செய்து மக்களை குறிப்பாக இளம் உள்ளங்களை கவர்வதை விட, இதே பண்தை எவ்வளவோ நல்ல காரியங்களுக்கு செலவழிக்கலாம் என்று பகிரங்கமாகவே பேசினேன். கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களுக்கு இதில் வருத்தம் தான். இருந்தாலும் எனக்கு சரியென்று பட்டதை மறைக்காமல் சொன்னேன். அப்படி பேசிய பிறகு தான் என் மனதுக்கு நிம்மதியாக இருந்தது.

ஆனந்த விகடன்- (08.10.2008)

No comments: